க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 51 – அர்ஜுனனுக்கும் துர்யோதனுக்கும் யுத்தத்தில் உதவி

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< பாண்டவ தூதன் – பகுதி 2

கண்ணனின் பெருமையும் சக்தியும் உலக ப்ரஸித்தி பெற்றதாகையால் யுத்தம் தொடங்குவதற்கு முன்பு அர்ஜுனனும் துர்யோதனனும் கண்ணனிடத்தில் உதவி கேட்டுச் சென்றார்கள். அவர்களுக்குக் கண்ணன் எப்படி உதவினான் என்பதை இப்போது அனுபவிக்கலாம்.

ஒரு நாள் கண்ணன் சயனத்தில் இருந்தபோது துர்யோதனன் கண்ணனின் திருப்பள்ளியறைக்குள் வந்தான். நேராகச் சென்று கண்ணன் திருமுடிப் பக்கல் நின்று கொண்டான். பிறகு அர்ஜுனன் உள்ளே வந்தான். கண்ணனின் திருவடிப் பக்கலில் சென்று நின்றான். இருவரும் கண்ணன் விழிப்பதற்குக் காத்திருந்தார்கள். அப்போது கண்ணன் திருப்பள்ளியுணர்ந்து பார்க்க, எதிரில் நின்ற அர்ஜுனனைப் பார்த்து “என்ன விஷயமாக வந்தாய்?” என்று கேட்டான். அர்ஜுனன் பதில் சொல்லும் முன்பு துர்யோதனன் “அவனுக்கு முன்பே நான் வந்துவிட்டேன்” என்று சொன்னான். கண்ணன் அவனையும் பார்த்து வரவேற்று, இருவரையும் நலம் விசாரித்து, இருவருக்கும் என்ன வேண்டும் என்று கேட்க, இருவரும் யுத்தத்தில் கண்ணன் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டார்கள். இருவருக்கும் உதவுவதாகச் சொன்ன கண்ணன் ஒரு பக்கம் தானிருப்பதாகவும் மற்றொரு பக்கம் தன்னுடைய நாராயண ஸேனையைக் கொடுப்பதாகவும் சொன்னான். துர்யோதனன் முந்திக்கொண்டு தனக்கு நாராயண ஸேனையே வேண்டும் என்று கேட்க, அர்ஜுனன் மகிழ்ச்சியுடன் கண்ணன் தன் பக்கல் இருப்பதே போதும் என்றான். கண்ணனும் இருவருக்கும் அப்படியே உதவி செய்வதாகச் சொன்னான். அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற துர்யோதனன் நேரே பீஷ்மர், த்ரோணர் முதலானோர் இருக்கும் ஸபைக்குச் சென்று தான் கண்ணனின் பெரிய ஸேனையைப் பெற்றதைச் சொல்ல, அவர்கள் அவனை மிகவும் நிந்தித்தார்கள். “உடனே சென்று கண்ணன் ஆயுதம் எடுக்கக் கூடாது என்ற வரத்தை வாங்கி வா” என்றார்கள். உடனே துர்யோதனனும் அவ்வாறே செய்தான்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரமான “கொல்லா மாக்கோல்” என்பதற்கு வ்யாக்யானம் அருளிய நம்பிள்ளை இந்தச் சரித்ரத்தை மிகவும் அழகாக வர்ணித்துள்ளார். இதே போல இன்னும் பல இடங்களில் இதை ஆசார்யர்கள் காட்டியுள்ளார்கள்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • தன்னிடத்தில் மிகவும் அன்புடையவர்களுக்கு எம்பெருமான் தன்னையே கொடுக்கிறான். பொய்யான அன்பைக் காட்டுபவர்களுக்குத் தானும் பொய்யான உதவியைச் செய்கிறான்.
  • தன்னிடத்தில் அன்பில்லாதவர்கள் தன்னருகில் வந்தாலும், அவர்கள் மனம் கலங்கும்படிச் செய்து, அவர்கள் ப்ரயோஜனமற்றதைப் பெற்றுப் போகும்படிச் செய்கிறான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment