க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 52 – கீதோபதேசம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< அர்ஜுனனுக்கும் துர்யோதனுக்கும் யுத்தத்தில் உதவி

கண்ணன் எம்பெருமானின் திருவுள்ளப்படி மஹாபாரத யுத்தம் தொடங்கியது. கண்ணன் எம்பெருமான் அர்ஜுனனுக்கு ஸாரதியாக (தேரோட்டியாக) ஆனான். தன்னுடைய பெரிய ஸேனையை துர்யோதனனுக்குக் கொடுத்தான். பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகிய இரு கோஷ்டிகளுக்கும் பெரிய படைகள் திரண்டன.

திரண்டிருக்கும் படை வீரர்களை நன்றாகக் காணவேண்டும் என்று எண்ணம் கொண்ட அர்ஜுனன், கண்ணனைப் பார்த்து “நம்முடைய தேரை இரண்டு படைகளுக்கும் நடுவிலே கொண்டு நிறுத்து” என்றான். கண்ணனும் அவ்வாறே செய்தான். அங்கே இரண்டு படைகளிலும் இருந்த பீஷ்மர், த்ரோணர் போன்ற தன்னுடைய பந்துக்களையும் ஆசார்யர்களையும் கண்ட அர்ஜுனன், மிகவும் கலக்கம் அடைந்து, கண்ணனிடத்தில் தன் வருத்தத்தை வெளிப்படுத்தினான். தனக்கு இப்படி ஒரு யுத்தத்தைச் செய்து, அதனால் வரும் ராஜ்யமும் வேண்டாம் என்றான். தன் காண்டீபத்தை நழுவவிட்டுக் கண்ணனே தஞ்சம் என்று அவனிடத்தில் சரணாகதி செய்தான்.

அதைக் கண்ட கண்ணனோ அர்ஜுனனின் கலக்கத்தைத் தன் கீதோபதேசத்தின் மூலம் போக்கினான். ஸ்ரீ கீதையில், கண்ணன் அர்ஜுனனுக்குப் பல விஷயங்களை எடுத்து விளக்குகிறான். நம் பூர்வர்கள் இதை விரிவாக விளக்கியுள்ளார்கள். அதாவது,

  • தத்வ விவேகம் – சித், அசித், ஈச்வர தத்வங்களை உள்ளபடி பகுத்து அறிதல்
  • நித்யத்வம் அநித்யத்வம் – ஆத்மா நித்யம் அசேதனம் அநித்யம்
  • நியந்த்ருத்வம் – பகவானே நியமிப்பவன்
  • ஸௌலப்யம் – பகவானின் எளிமை
  • ஸாம்யம் – பகவான் அனைவருக்கும் பொதுவானவன்
  • அஹங்கார தோஷம் – அஹங்காரத்தின் குறைகள்
  • இந்த்ரிய பலம் – நம்மைக் கட்டிவைப்பதில் இந்த்ரியங்களின் பலம்
  • மன: ப்ராதான்யம் – மற்றைய இந்த்ரியங்களில் காட்டில் மனதின் முக்யத்வம்
  • கரண நியமனம் – இந்த்ரியங்களை அடக்குவது
  • ஸுக்ருதி பேதம் – நான்கு விதமான நல்லோர்கள்
  • தேவாஸுர விபாகம் – தேவர்களையும் அஸுரர்களையும் பிரித்து விளக்குவது
  • விபூதி யோகம் – தன்னுடைய பெரிய செல்வத்தைக் காட்டுதல்
  • விச்வரூப தர்சனம் – உலகமே தனக்கு சரீரமாக இருப்பதைக் காட்டுதல்
  • ஸாங்க பக்தி – கர்மம் மற்றும் ஞானத்தை அங்கமாகக் கொண்ட பக்தி யோகம்
  • இரண்டு விதமான ப்ரபத்திகள் – பக்திக்கு அங்கமான சரணாகதியும், தனித்துப் பண்ணும் சரணாகதியும்

இப்படிப் பல விஷயங்களை அர்ஜுனனுக்கு உணர்த்தி, பலனில் ஆசையில்லாமல், யுத்தத்தைச் செய் என்று சொல்லி, இறுதியில் அவன் “கண்ணா! நீ சொல்வதை நான் செய்கிறேன்” என்று சொல்ல வைத்தான் எம்பெருமான். இதற்குப் பிறகே யுத்தம் தொடங்கியது.

கண்ணன் எம்பெருமான் தன் சோதிவாய்த் திறந்து அருளிய கீதையை ஆழ்வார்கள் மிகவும் கொண்டாடியுள்ளார்கள். மனிதப் பிறவியை அடைந்த ஒவ்வொருவரும் ஸ்ரீ கீதையைத் தங்கள் உஜ்ஜீவனத்துக்காகக் கற்றறிய வேண்டும் என்று அறுதியிடுகின்றனர். மேலும் ஸ்ரீ கீதை, “ஸர்வத4ர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச: ||” (எல்லா உபாயங்களையும் விட்டு, என்னையே உபாயமாகப் பற்று; நான் உன்னுடைய எல்லாப் பாவங்களையும் போக்குகிறேன்; சோகப் படாதே) என்கிற க்ருஷ்ண சரம ச்லோகத்தை உட்கொண்டிருப்பதால், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பஞ்ச ஸம்ஸ்காரத்தின்போது ரஹஸ்ய த்ரய மந்த்ரோபதேசத்தில், இந்தச் சரம ச்லோகமும் இருக்கிறது. இது ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு முக்கியமாக அறிந்து கொண்டு கடைபிடிக்க வேண்டுவது.

ஆழ்வார்களின் பாசுரங்களில் ஸ்ரீகீதையின் முக்யத்வம் விளக்கப்பட்டிருக்கின்றன

  • திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 71இல் “சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக்கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராம் மெய்ஞானமில்” (அடைய முடியாதவனாகவும் எளிதில் அடையப்படுபவானாகவும், சிறு பிள்ளையாகவும் மிகப் பெரியவனாகவும், இடையனாக அவதரித்த எம்பெருமான், த்வாரகைக்குத் தலைவனாகவும் இருந்து கொண்டு, மஹாபாரத யுத்தத்தின்போது ஸ்ரீ கீதையை அருளிச்செய்தான். இவ்வுலகில் இருந்தும் கீதையைக் கற்றறியாதவர்கள் எம்பெருமானுக்கு எதிரிகளான அறிவிலிகள்) என்கிறார்.
  • நம்மாழ்வார் திருவாய்மொழி 4.8.5இல் “அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத்தவர் அறிய நெறியெல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்தொரு மூர்த்தி” (இவ்வுலகில் இருக்கும் அறிவில் குறைந்தவர்களாக இருப்பதை அறியாத மனிதர்களுக்கு. ஸர்வஜ்ஞனான எம்பெருமான் அறிந்து கொள்ள வேண்டிய அர்த்தங்களை மிகத் தெளிவாக அருளினான்) என்று அருளியுள்ளார்.

நம் ஆசார்யர்களும் ஸ்ரீ கீதையைக் கற்று கொள்வதை அவச்யம் என்று சொல்லியுள்ளனர். எம்பெருமானார் ஸ்ரீ கீதைக்கு அழகான ஒரு வ்யாக்யானத்தை அருளியுள்ளார். வேதாந்தாசார்யர் அதை இன்னும் விரித்துரைத்து தாத்பர்ய சந்த்ரிகை என்ற க்ரந்தத்தை அருளியுள்ளார். பல ப்ரமாணங்களில் இருந்தும் மேற்கோள் காட்டி, ஸ்ரீ கீதையின் ஆழமான, உண்மை அர்த்தங்களை இந்த வ்யாக்யானங்கள் காட்டுகின்றன.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • எம்பெருமான் தானும் ஆசார்ய பதத்தை ஆசைப்பட்டு கீதாசார்யனாக ஆனான் என்று பூர்வர்கள் காட்டுகிறார்கள். ஆசார்ய ஸ்தானமானது எம்பெருமானே ஆசைப்படக் கூடியது.
  • அர்ஜுனனுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியதே எம்பெருமான்தான். அவனை ஒரு வ்யாஜமாகக் கொண்டு, உலகுக்கு இந்த கீதா சாஸ்த்ரத்தை உபதேசித்தான்.
  • எம்பெருமான் அர்ஜுனனுக்கு ஸாரதியாக வந்தது எம்பெருமானுடைய ஸௌலப்யம் (எளிமை) மற்றும் ஆச்ரித பாரதந்த்ர்யத்தின் (அடியார்கள் சொல்படி நடப்பது) உயர்ந்த நிலை.
  • எம்பெருமான் விச்வரூபத்தை அர்ஜுனனுக்குக் காட்டியது அவனுடைய பரத்வத்தின் (மேன்மை) உயர்ந்த நிலை.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment