க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 55 – மஹாபாரத யுத்தம் – பகுதி 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< ஸஹஸ்ரநாமம்

பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு கௌரவர்களின் ஸேனாதிபதியாக த்ரோணர் பொறுப்பேற்கிறார். யுத்தம் முழு வேகத்தில் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் பல வீரர்கள் கொல்லப்படுகிறார்கள்.

பீமனுக்கும் ஹிடும்பிக்கும் பிறந்தவனான கடோத்கஜன் யுத்தத்துக்கு வந்து பெரிய அளவில் கௌரவர்கள் ஸேனைக்கு ஆபத்தை விளைவித்தான். இறுதியில் கர்ணனால் கொல்லப்பட்டான்.

அதற்குப் பிறகு அர்ஜுனனுக்கும் ஸுப்தத்ராவுக்கும் பிறந்தவனான அபிமன்யூ மிகவும் வீரத்தோடு போர் புரிந்தான். கௌரவர்கள் அவனைக் கொல்வதற்கு ஒரு பெரிய திட்டத்தைத் தீட்டினர். த்ரோணரின் தலைமையில் சக்ர வ்யூஹத்தை அமைத்தார்கள். சக்ர வ்யூஹத்தின் உள்ளே போகத் தெரிந்த அபிமன்யூவுக்கு வெளியே வரத் தெரியாது. யுதிஷ்டிரன் முதலானோர் அவனுக்குப் பாதுகாப்பாக பின்தொடர்ந்து வருவதாக அவனுக்கு ஊக்கம் அளித்தார்கள். ஆகையால் அவனும் உள்ளே சென்றான். இப்படி அவனை உள்ளே வரவழைத்துப் பல மஹாரதர்கள் (பெரிய வீரர்கள்) சேர்ந்து கொன்றனர். உதவிக்கு வரப்பார்த்த யுதிஷ்டிரன் முதலானவர்களைப் பல வீரர்கள் சேர்ந்து தடுத்து விட்டனர். அபிமன்யூவைக் கொன்றதில் முக்யப் பங்கு வகித்தவன் ஜயத்ரதன்.

இதெல்லாம் நடக்கும்போது அருகில் அர்ஜுனன் இல்லை. திரும்பி வந்த அர்ஜுனன் தன் மகனான அபிமன்யூ பெரும் வீரத்தோடு போரிட்டு இப்படிக் கோழைத்தனமாகக் கொல்லப்பட்டான் என்பதைக் கேட்டு மிகவும் துயரமும் கோபமும் அடைந்தான். அபிமன்யூவின் மரணத்துக்கு முக்யக் காரணமான ஜயத்ரதனை மறுநாள் ஸூர்ய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவதாகவும் அப்படிக் கொல்லவில்லை என்றால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் சபதம் செய்தான்.

மறுநாள் யுத்தம் தொடங்கியதிலிருந்து ஜயத்ரதனை அர்ஜுனன் நெருங்க முடியாமல் கௌரவர்கள் பார்த்துக் கொண்டார்கள். ஸூர்ய அஸ்தமனமும் நெருங்கியது. அப்போது, கண்ணன் தன் சக்ராயுதத்தைக்கொண்டு ஸூர்யனை மறைக்க, அப்பொழுது ஸூர்ய அஸ்தமனம் ஆனதைப் போலத் தோற்றம் ஏற்பட்டது. துர்யோதனன் ஜயத்ரதனை வெளியே கொண்டுவந்து நிறுத்தி, அர்ஜுனனைப் பார்த்து “எப்போது நீ உன்னையே முடித்துக் கொள்ளப் போகிறாய்” என்று கேட்டான். அப்போது கண்ணன், தன் சக்ராயுதத்தை ஸூர்யனிடத்திலிருந்து விலக்கி, அர்ஜுனனைப் பார்த்து “இப்போது ஜயத்ரதன் தலையை ஒரு அம்பால் அறுத்து, அது சென்று அவன் தந்தையின் கையில் விழும்படிச் செய்” என்று ஆணையிட்டான். அர்ஜுனனும் அவ்வாறே செய்ய, அந்தத் தலையைக் கையில் பெற்ற ஜயத்ரதனின் தந்தை அதைக் கீழே போட, அவரும் மாண்டார்.

இவ்வாறு அபிமன்யூவின் மரணத்துக்கு அர்ஜுனன் பழி வாங்கக் கண்ணன் பேருதவி செய்தான்.

ஆழ்வார்கள் எம்பெருமான் அப்படிப் பகலை இரவாக்கினான் என்பதைத் தங்கள் பாசுரங்களில் அனுபவித்துள்ளார்கள்.

  • பொய்கை ஆழ்வார் தன் முதல் திருவந்தாதியில் “முயங்கு அமருள் தேராழியால் மறைத்தது என் நீ திருமாலே போராழிக் கையால் பொருது” என்று காட்டியுள்ளார்.
  • திருமழிசை ஆழ்வார் தன் நான்முகன் திருவந்தாதியில் “வெங்கதிரோன் மாயப்பொழில் மறைய தேராழியால் மறைத்தாரால்” என்று காட்டியுள்ளார்.
  • திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெட பகலே ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்கமாநகர் அமர்ந்தானே” என்று காட்டியுள்ளார்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • ஸூர்யனைவிடச் சக்கரத்தாழ்வார் மிகவும் அதிகமான ஒளி படைத்தவர். ஆகையால் சக்கரத்தாழ்வாரைக் கொண்டு எல்லாருடைய கண்களும் இருண்டு போகும்படிச் செய்து, ஸூர்ய அஸ்தமனத்தைப் போலே ஆக்கினான் எம்பெருமான்.
  • ஜயத்ரதனையும் கொல்ல வேண்டும். அவன் தலையைக் கீழே தள்ளுபவர்களுக்கு மரணம் என்றிருப்பதால் அதிலிருந்தும் தப்ப வேண்டும் என்று பார்த்துக் கண்ணன் எம்பெருமான் சரியான யோஜனை மூலம் ஜயத்ரதனைக் கொன்று அவன் தலை அவன் தந்தை கையில் சென்று விழும்படிச் செய்தான்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment