க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 54 – ஸஹஸ்ரநாமம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< மஹாபாரத யுத்தம் – பகுதி 1

மஹாபாரத்தில் கண்ணனால் உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ கீதையைப் போல கண்ணனின் பெருமையைக் காட்டும் ஸ்ரீ ஸஹஸ்ரநாமமும் மிக முக்யமான பகுதி. அதைப் பற்றி இப்போது அனுபவிக்கலாம்.

கண்ணனின் ஆணையின் பேரில் பீஷ்மரை அம்புப் படுக்கையில் சாய்த்த அர்ஜுனன், பாண்டவர்களோடு சேர்ந்து மிகவும் வருந்தினான். பிதாமஹராக, தங்கள் குலத்துக்கே, மிகப் பெரியவராகவும், சிறந்த குணங்களை உடையவராகவும், எம்பெருமானிடத்தில் மிகுந்த பக்தியை உடையவராகவும் விளங்கிய பீஷ்மரை வீழ்த்திவிட்டோமே என்று அவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டது. கண்ணன் எம்பெருமானே யுத்தத்தில் இப்படி ஏற்படுவது இயற்கையே என்று கூறி அவர்களுக்கு ஆறுதல் கூறினான்.

அதற்குப் பிறகு, அன்று இரவில், கண்ணன் யுதிஷ்டிரனையும் அவன் தம்பிகளையும் அழைத்து “நீங்கள் பீஷ்மரிடத்தில் சென்று உயர்ந்த அர்த்தங்களை அறிந்து வாருங்கள்” என்று சொன்னான். அவர்கள் அனைவரும் கண்ணனையும் அழைத்துக் கொண்டு பீஷ்மரிடம் சென்றார்கள். பாண்டவர்கள் பீஷ்மரை வணங்கித் தங்களுக்கு “யார் பர தெய்வம்? எது உயர்ந்த குறிக்கோள்? அதை அடைவதற்கான வழி எது?” போன்ற கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்குமாறு ப்ரார்த்தித்தார்கள். அப்போது பீஷ்மர் அவர்களுக்கு தேவகிநந்தனான கண்ணனைக் காட்டி, இவனே பர தெய்வம், இவனுக்குத் தொண்டு செய்வதே உயர்ந்த குறிக்கோள், இவனுடைய ஆயிரம் நாமங்களைச் சொல்லி ஜபிப்பதே சிறந்த வழி என்று விளக்குகிறார். இதற்கு மேலே ஆயிரம் திருநாமங்களையும் சொல்லி எம்பெருமானை மகிழ்வித்தார் பீஷ்மர். பாண்டவர்களும் கண்ணனின் பெருமையை நன்கு உணர்ந்தார்கள்.

ஆழ்வார்கள் எம்பெருமானின் ஸஹஸ்ரநாம வைபவத்தைப் பல இடங்களில் காட்டியுள்ளார்கள்.

  • பெரியாழ்வார் தன் திருப்பல்லாண்டில் “தொண்டக் குலத்தில் உள்ளீர்! வந்து அடிதொழுது ஆயிர நாமம் சொல்லி” என்று காட்டியுள்ளார்.
  • ஆண்டாள் தன் நாச்சியார் திருமொழியில் “நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா!” என்கிறாள்.
  • நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “ஓராயிரமாய் உலகேழளிக்கும் பேராயிரம் கொண்டதோர் பீடுடையன்” என்கிறார்.
  • திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓராயிர நாமம்” என்று காட்டியுள்ளார்.

ஸ்ரீ பராசர பட்டர் ஸஹஸ்ரநாமத்துக்கு ஒரு விரிவான உரையை அருளியுள்ளார்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • விஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவச்யமில்லை. ஸஹஸ்ரநாமம் என்றாலே அது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைத் தான் குறிக்கும்.
  • இந்தக் கலியுகத்தில் திருநாம ஸங்கீர்த்தனம் பகவானை அடைவதற்குச் சிறந்த வழியாகச் சொல்லப்பட்டிருந்தாலும், ஸ்ரீவைஷ்ணவர்கள் திருநாம ஸங்கீர்த்தனத்தை உபாயமாகப் பண்ணுவதில்லை. கைங்கர்யமாகவே பண்ணுவார்கள். எம்பெருமான் மட்டுமே ஜீவாத்ம ஸ்வரூபத்துச் சேர்ந்த உபாயம் என்ற காரணத்தினால் வேறு எதையும் உபாயமாக ஏற்றுக்கொள்வதில்லை.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment