ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – யுத்த காண்டம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< ஸுந்தர காண்டம்

பிராட்டி இருக்கும் இடம் தெரிந்தவுடன் அவளை மீட்பதற்கான முயற்சியைத் தொடங்கினர். முதலில் ஸுக்ரீவன் அனைத்து திசைகளிலும் இருக்கும் கரடி, குரங்கு போன்ற மிருகங்களுக்குச் செய்தி அனுப்பி அவற்றை எல்லாம் கிஷ்கிந்தைக்கு வரும்படிச் செய்தான். அவர்கள் அனைவரும் வந்து சேர்ந்த பிறகு, அனைவருமாகத் தெற்குக் கடற்கரையை நோக்கிச் சென்றனர். அந்த ஸமயத்தில் கடற்கரையில் ஸ்ரீ ராமனும் மற்றவர்களும் வீற்றிருந்து எவ்வாறு கடலைக் கடப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது லங்கையில் விபீஷணன் ராவணனுக்கு ஸீதாப் பிராட்டியை ஸ்ரீ ராமனிடம் சேர்த்து விடும்படி உபதேசம் செய்ய, ராவணனும் இந்த்ரஜித்தும் அவனைக் கடுமையாக நிந்திக்க, உடனே தனக்கு நெருக்கமான நான்கு ராக்ஷஸர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு ஆகாச மார்க்கத்தில் ஸ்ரீ ராமன் இருந்த கடற்கரையை அடைந்தான். அவன் வரவைக் கண்ட ஸுக்ரீவன் முதலானோர் அவனைக் கொல்லப் பார்க்க, அவன் தான் ஸ்ரீ ராமனைச் சரணடைய வந்திருப்பதாகத் தெரிவித்தான். இதை அறிந்த ஸ்ரீ ராமன் ஸுக்ரீவன் முதலானோருடன் ஆலோசித்தான். ஸுக்ரீவன் முதலானோர் அவனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அவனைக் கொன்று விட வேண்டும் என்றும் சொல்ல, ஹனுமன் அவன் நல்லவன் என்றும் அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னான். இதை எல்லாம் கேட்ட ஸ்ரீ ராமன் அவன் கெட்டவனாக இருந்தாலும் தஞ்சம் என்று வந்தவனை ஏற்றுக் கொள்வதே பொருத்தமானது என்று தெரிவித்து, அந்த ஸுக்ரீவனையே அனுப்பி விபீஷணனை அழைத்து வரச் செய்து, அவனுக்குத் தஞ்சம் அளித்தான். அது மட்டும் அல்லாமல் அவனைத் தன் தம்பியாக ஏற்றுக் கொண்டு, அவனுக்கு லங்கா ராஜ்ய பட்டாபிஷேகமும் பண்ணி வைத்தான்.

அதன் பின் விபீஷணன் கடலைக் கடப்பதற்குக் கடலரசனிடத்தில் சரணாகதி பண்ணுமாறு யோசனை சொல்ல, ஸ்ரீ ராமனும் அதன் படி முறையாகத் தீர்த்தமாடிச் சரணாகதி செய்து, மூன்று நாட்கள் அப்படியே கடற்கரையில் கிடந்தான். ஆனாலும் கடலரசன் வராமல் இருக்க, ஸ்ரீ ராமன் மிகவும் கோபம் கொண்டு லக்ஷ்மணனை அழைத்து தன்னுடைய வில்லையும் அம்பையும் கொண்டு வரச் செய்து, கடலை வற்றப் பண்ணுவதாகச் சொல்லி, அம்பைப் பூட்டினான். அதைக் கண்டு பயந்து ஓடோடி வந்த கடலரசன் ஸ்ரீ ராமனிடம் மன்னிப்புக் கேட்க, ஸ்ரீ ராமனும், அந்த அம்பை கடலரசனுக்கு எதிரிகளை நோக்கி எறிந்தான். கடலரசனும், ஸ்ரீ ராமன் அங்கே அணை கட்டுவதற்கு இசைந்து கொடுப்பதாகச் சொன்னான். பின்பு வானரங்களைக் கொண்டு லங்கைக்குக் கடலுக்கு மேலே கற்களால் ஆன அணையைக் கட்டினான். அதன் மூலம் லங்கையைச் சென்று அடைந்து, ராவணனுக்குத் தங்கள் வரவை அறிவித்து, அனைவரும் யுத்தத்துக்கு ஸித்தமானார்கள்.

யுத்தம் தொடங்கி, ஸ்ரீ ராமன் தன்னுடைய சார்ங்கமென்னும் வில்லாலே அம்பு மழையைப் பொழிந்து, ராவண சேனைக்குப் பெரும் சேதத்தை விளைத்தான். கும்பன், நிகும்பன், இந்த்ரஜித், கும்பகர்ணன் என்று ஒவ்வொருவராக மடிந்தனர். பின்பு விபீஷணின் யோசனைப்படி ராவணனின் தலைகளை அறுத்துத் தள்ளி அவனையும் வீழ்த்தினான். ஸ்ரீ ராமன் விஜயராகவனாக, அப்பொழுது ப்ரஹ்மா, ருத்ரன் முதலிய தேவர்கள் எல்லாரும் வந்து பூமாரி பொழிந்து ஸ்ரீ ராமனைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

ஸீதாப் பிராட்டியை விபீஷணனைக் கொண்டு வரவழைத்து, அவளையும் மற்றையோரையும் அழைத்துக் கொண்டு புஷ்பக விமானத்தில் ஏறி திருவயோத்தியை நோக்கிச் சென்றான். போகும் வழியில் பரத்வாஜ முனிவர் ஆச்ரமத்தை அடைந்தான். தனக்காகக் காத்திருக்கும் பரதனுக்கு ஹனுமன் மூலம் தான் வந்து கொண்டு இருப்பதைத் தெரிவித்து அவனையும் ஆச்வாஸப்படுத்தினான். அதன் பிறகு திருவயோத்தியைச் சென்றடைந்து, பரதனை ஆசையோடு அணைத்துக்கொண்டு அவன் வருத்தத்தைத் தீர்த்தான்.

அதன் பிறகு வஸிஷ்டரால் பட்டாபிஷேகத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எல்லா திசைகளில் இருக்கும் புனித நதிகளில் இருந்தும் தீர்த்தம் கொண்டு வரப்பட்டன. அழகான வஸ்த்ரங்கள், திருவாபரணங்கள், மாலைகள், சந்தனம் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ராமனும் ஸீதாப் பிராட்டியும், ஸிம்ஹாஸனத்திலே எழுந்தருளியிருக்க, ஸ்ரீ ராமன் வஸிஷ்டாரால் முடிசூட்டப்பட்டான். பரதனும் லக்ஷ்மணனும் சத்ருக்நனும், ஸுக்ரீவனும், ஹனுமனும், விபீஷணனும் மற்றும் பல ரிஷிகளும், தேவர்களும் புடை சூழ ஸ்ரீ ராம பட்டாபிஷேஜம் இனிதே நடந்தது. அந்த ஸமயத்தில் ஸ்ரீ ராமன், வந்திருந்த அனைவருக்கும் தகுந்த பரிசுகளை வழங்கி கௌரவித்தான்.

அதன் பிறகு ஸ்ரீ ராமன் திருவயோத்தியில் இருந்து கொண்டு அனைத்து ஜனங்களும் மகிழ்ந்திருக்கும்படியான ராம ராஜ்யத்தை நடத்தினான்.

தாத்பர்யங்கள்

  • நம் ஸம்ப்ரதாயத்தில் மிகவும் ப்ரஸித்தமானது கடற்கரை வார்த்தை. வேல்வெட்டிப் பிள்ளை என்பவர் நம்பிள்ளையிடத்தில் “ஸ்ரீ ராமன் அநுஷ்டானங்கள் எல்லாம் செய்து சரணாகதி பண்ணினான். விபீஷணனோ எந்த அனுஷ்டானமும் செய்யாமல் வந்து சரணாகதி பண்ணினான். இதில் எது சரி?” என்று கேட்க அதற்கு நம்பிள்ளை “நம்முடைய அனுஷ்டானமோ, அனுஷ்டானம் இல்லாமையோ இங்கு முக்யமன்று. அனுஷ்டானம் உள்ளவன் அனுஷ்டானத்தோடு சரணாகதி பண்ணலாம். அது இல்லாதவன் அப்படியே சரணாகதி பண்ணலாம், சரணாகதி இதில் எதையும் எதிர்பார்க்காது” என்றார். அதாவது.பகவான் நாம் அவனைப் பற்றும்போது நம்மிடத்தில் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்பது இங்கே விளக்கப்படுகிறது.
  • ஸ்ரீ ராமன் விபீஷணனுக்கு அபய ப்ரதானம் (தஞ்சம் அளித்தல்) பண்ணும்போது, அவனுடைய மற்றும் அவன் அண்ணனான ராவணனுடைய தோஷங்கள் பல இருந்தாலும், தயங்காமல் அவனை ஏற்றுக்கொண்டான். இது அவனுடைய வாத்ஸல்யம் என்கிற குணத்தை நன்கு காட்டுகிறது.
  • தான் ஸ்ரீ ராமனிடத்தில் பண்ணிய சரணாகதி பலித்ததால், அந்த வழியையே ஸ்ரீ ராமனுக்கு விபீஷணன் அறிவுறுத்தினான். ஆனால் ஸ்ரீ ராமன் ஸர்வேச்வரனாக இருந்ததாலும் கடலரசன் நற்குணங்களின் நிறைவைப் பெறாதவன் ஆகையாலும், அந்த சரணாகதி பலிக்கவில்லை.
  • ராவணன் செய்த அபசாரத்தின் மிகுதியால் அவனை மிகவும் துன்புறுத்தி அவன் உற்றார் உறவினர்களை அழித்து அவனைத் தனிமைப்படுத்திக் கடைசியில் அவனைக் கொன்றான் ஸ்ரீ ராமன். அடியார்களிடத்தில் அபசாரப்பட்டதால் ஸ்ரீ ராமனின் கோபத்துக்கு இலக்காகி மிகவும் க்ரூரமான முறையில் மரித்தான் ராவணன்.
  • ஸ்ரீ ராமன் யுத்தம் முடிந்த கையோடு புஷ்பக விமானத்தில் ஏறி திருவயோத்திக்கு அருகே பரத்வாஜ முனிவரின் ஆச்ரமத்தை நேரே அடைந்ததால், ஸ்ரீ ராமன் வழியில் ராமேச்வரத்தில் லிங்க வழிபாடு செய்தான் என்ற பொய்க்கதை நேரே ஆதாரமற்றது என்பதை எளிதில் உணரலாம். ஸ்ரீ ராமாவதாரமே இந்த ராவணனைக் கொல்வதற்காக ஏற்பட்டதாகையாலும், அவனைக் கொன்றால் பாபம் வரும் என்று சொல்வது மிகவும் பொருத்தமற்ற வாதமாகும்.
  • ராம ராஜ்யம் என்றால் நீதி வழுவாத ராஜ்யம். அனைவரும் மகிழ்ச்சியோடு தர்மநெறி வழுவாமல் வாழ்ந்தனர்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment