க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 44 – சிசுபால வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< ஜராஸந்த வதம்

கண்ணன் எம்பெருமானின் மேற்பார்வையில் யுதிஷ்டிரன் ராஜஸூய யாகத்தைத் தொடங்கினான். பல ரிஷிகளையும் பெரியோர்களையும் கொண்டு இந்த யாகத்தைத் தொடங்கினான்.

யாகத்தில் அக்ர பூஜை (முதல் மரியாதை) யாருக்குக் கொடுப்பது என்ற கேள்வி வந்தது. அப்பொழுது முதலில் ஸஹதேவன் கண்ணனின் பெருமைகளை நன்றாக எடுத்துக் கூறி, பரமபுருஷனான கண்ணனுக்கே முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என்று உறுதியாகச் சொன்னான். அதைக் கேட்ட பெரியோர்களும் மக்களும் மிகவும் உகந்து ஸஹதேவனின் வார்த்தையைக் கொண்டாடினார்கள். யுதிஷ்டிரனும் கண்ணனுக்கு ஒரு உயர்ந்த ஆஸனத்தைக் கொடுத்து அவன் திருவடிகளை விளக்கி, பாத பூஜை செய்து, அந்தத் தீர்த்தத்தைத் தானும் தன் தலையில் ப்ரோக்ஷித்துக் கொண்டு, தன் தம்பிகளுகுக்கும் உறவினர்களுக்கும் ப்ரோக்ஷித்தான். அங்கிருந்த பலரும் அதேபோலச் செய்தார்கள். அனைவரும் “வெற்றி! வெற்றி!” என்று கரகோஷம் எழுப்ப ஆகாசத்திலிருந்து பூமாரி பொழிந்தது.

இதை எல்லாம் கண்டு கொண்டிருந்த சிசுபாலன் மிகவும் கோபமுற்றான். சிசுபாலன் முன்பே கண்ணனிடத்தி விரோதம் கொண்டவன். அவன் கண்ணனை அவமானப்படுத்தும் வகையில் பேசத் தொடங்கினான். அதைக் கண்ட பாண்டவர்கள் அவனைத் தாக்கப் பார்த்தார்கள். ஆனால் கண்ணனோ அவர்களைத் தடுத்தான். கண்ணன், முன்பே சிசுபாலன் விஷயத்தில் ஒரு சபதம் செய்திருந்தான். ஒரு ஸமயத்தில் நூறு முறை சிசுபாலன் நிந்திப்பதைப் பொறுத்துக் கொள்வதாகவும், அதற்கு மேலே அவன் நிந்தித்தால் அவனைத் தண்டிப்பது என்றும் முடிவு செய்திருந்தான். அதன்படி சிசுபாலன் நூறு முறை நிந்தித்தபிறகு தன்னுடைய சக்கரத்தாழ்வாரைக் கொண்டு அவன் தலையைத் துண்டித்தான். அந்த ஸமயத்தில் சிசுபாலன் எம்பெருமானுடைய திருநாமத்தைப் பல முறை சொன்னதாலும் முன்பே ப்ரஹ்மாவின் மானஸ புத்ரர்களாலே சபிக்கப் பெற்றதால் எடுத்த மூன்று பிறவிகள் முடிந்ததாலும், எம்பெருமானைச் சென்று அடைந்தான்.

அதற்குப் பிறகு, யாகமானது சிறந்த முறையில் நிறைவு செய்யப்பட்டு, யுதிஷ்டிரனும் வந்திருந்த அனைவருக்கும் சிறந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்து அனைவருக்கும் விடைகொடுத்தான். கண்ணனும் தன்னுடைய பரிவாரத்துடன் த்வாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான்.

ஆழ்வார்கள் சிசுபால வதத்தை சில இடங்களில் காட்டியுள்ளார்கள். பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “பலபல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை அலவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை” என்று காட்டியுள்ளார். ஆண்டாள் தன் நாச்சியார் திருமொழியில் “அன்று இன்னாதன செய் சிசுபாலனும்” என்று அவனாலே அழிக்கப்பட்டவர்களைக் காட்டியுள்ளாள். நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும் சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாள் பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே” என்று சிசுபாலன் நற்கதி அடைந்ததை அழகாகக் காட்டியுள்ளார்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • இந்த ஸம்ஸாரத்தில் விஷ்ணு லோகம் என்று சொல்லப்படும் க்ஷீராப்தியில் (திருப்பாற்கடலில்) காவலாளிகளான ஜய விஜயர்கள் ப்ரஹ்மாவின் மானஸ புத்ரர்களாலே சபிக்கப் பட்டு, மூன்று பிறவிகள் பிறந்து எம்பெருமானை எதிர்த்தார்கள். அதில் கடைசிப் பிறவியே சிசுபாலனும் தந்தவக்ரனும்.
  • சிசுபாலன் எம்பெருமான் திருவடிகளை அடைந்தான் என்பதைப் பூர்வர்கள் பலவிதத்தில் விளக்கியுள்ளார்கள். சிசுபாலன் போன்றவர்கள் இவ்வுலகில் இருப்பதைக் காட்டிலும் பரமபதத்தில் ஒரு ஓரத்தில் இருப்பது நல்லது என்று அங்கே அழைத்துச் சென்றான் எம்பெருமான் என்று சொல்லுவார்கள். எம்பெருமானால் கொல்லப்படுவதற்கு ஒரு க்ஷணம் முன்பு எம்பெருமான் தன் வடிவழகை முழுதுமாக அவனுக்குக் காட்ட, அதைக் கண்டு மயங்கிய அவன் உடனே கண்ணனிடத்தில் பரமபக்தியைப் பெற்றான். அதனாலே எம்பெருமானை அடைந்தான் என்றும் சொல்லுவார்கள்.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment