ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
நாதமுனிகளுக்கு ஆழ்வார் திருத்திரை வளைத்துத் திருவாய்மொழி ப்ரஸாதித்து அருளுகிற அளவிலே “பொலிக பொலிக” வந்தவாறே பூதபவிஷ்யத்வர்த்தமான காலத்ரயபர்யவஸாயி ஜ்ஞாநமுடையராகையாலே உடையவருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று “இந்த ப்ரபந்ந குலத்திலே ஒரு மஹானுபாவர் திரு அவதரிக்க போகிறார். அவாராலே நாடு அடங்க வாழப்போகிறது” என்று நாதமுனிக்கு அருளிச் செய்ய, அவரும் “பயன் அன்றாகிலும்” என்கிற பாட்டை இயலும் இசையுமாக ஏறிட்டு ஆழ்வாரைப் பாடி உகப்பித்து, ”தேவரீர் ஸர்வஜ்ஞராகையாலே அறியப் போகாது ஒன்றுமில்லை அவ்யக்தியினுடைய ஸம்ஸ்தானத்தை தேவரீர் பாவித்துக் காட்டியருளவேணும்” என்று ப்ரார்த்திக்க அற்றை ராத்திரியிலே நாதமுனிகளுக்கு ஸ்வப்னமுகேந ஆழ்வார் எழுந்தருளி த்வாதஶோர்த்வ புண்டரங்களும் காஷாய திருப்பரியட்டமும், த்ரிதண்ட ஹஸ்தமும், ஆஜானுபாஹுவும் நிரவதிக தேஜோரூபமான திருமேனியும், “மகரம்சேர் குழையிருபாடிலங்கியாட” தீர்க்கராய் எழுந்தருளி, க்ருபா ப்ரவாஹ ஸூசகமான முகமும், முறுவலும் சிவந்த திருக்கண் மலருமாக ஸேவை ப்ரஸாதித்தருளி ‘அவ்யக்த்தியிருக்கும்படி இது காணீரே’ என்றருளிச் செய்து, ‘இவ்யக்தி அடியாக ப்ரபந்நகுல பூதரெல்லாரும் பேறு பெறப் போகிறார்கள்’ என்று அருளிச் செய்தார்.
நாதமுனிகளும் உடனே உணர்ந்தருளி ஆழ்வார் திருவடிகளிலே தண்டம் சமர்ப்பித்து ‘தேவரீருடைய ஸம்ஸ்தானத்திலும் தேவரீர் பாவித்தருளின ஸம்ஸ்தானம் அடியேனுக்கு மிகவும் ஆகர்ஷகமாயிருந்ததீ!” என்ன, “இதென்ன மாயம்! லோகமெல்லாம் இவ்யக்த்தியாலே காணும் மேல்விழப் போகிறது!” என்று அருளிச் செய்தார். நாதமுனிகளும் திரியவும் ஆழ்வாரை உகப்பித்து இந்த பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை நித்யமாக அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்ய, ஆழ்வாரும் உடையவருடைய ஸர்வோத்தாரகத்வத்தை வெளியிடக்கடவோமென்று மற்றை நாள் ராத்திரி ஸ்வவிக்ரஹத்துக்கடவ சில்பவம்ஶரிடத்திலே ஸ்வப்ன முகேன எழுந்தருளி பவிஷ்யதாசார்ய ஸம்ஸ்தானத்தை வகுத்துக் காட்டியருளி “நாளை நம் புளிக்கீழே வந்து இப்படியே ஸர்வாவயவ பூர்ணமாக சமையுங்கோள்” என்று அருளிச் செய்ய, மற்றை நாள் விடிந்தவாறே, திருப்புளியின் கீழேவந்து ஶரீரஶோதன பூர்வகமாக ஆஹாரநித்ரையின்றிக்கே அவ்விக்கிரஹத்தை நிர்மித்துக்கொடுக்க, அவ்விக்ரஹத்திலே ஒரு ஶக்தி விசேஷத்தை அதிஷ்டிப்பித்தருளி, நாதமுனிகளை அழைத்தருளி, “உம்முடைய அபேக்ஷிதத்தை இதோ தலைக் கட்டினோம் கண்டீரே” என்று அவ்விக்ரஹத்தை ப்ராஸாதித்து அருளி – 9. “ராமஸ்ய தக்ஷிணோ பாஹூ: “ என்கிறபடியே நம்முடைய அவயவமாக நினைத்திரும். இவ்யக்த்திக்கு அடி நாமாகையாலே நமக்கு அடியுமாய் நம் கார்யத்துக்கு கடவதுமாயிருக்கும். இனிமேல் நம் தர்ஶனத்துக்கு வர்த்தகமாக அடியிட்டு வைத்தோம். உம்முடைய குலத்திலே ஒருவர் இவ்வயக்தியை ஸாக்ஷாத்கரிக்க போகிறார். அது தான் பெருமாள் திரு அபிஷேகத்துக்கு பாரித்த மாதத்திலே பதினெட்டாமோத்திலே ப்ரதமோபாயம் பிறந்தாப்போலே நம் பிறவி நாளைக்கேறப்பார்த்தால் பதினெட்டாமவதியிலே சரமோபாயம் பிறக்கப் போகிறது, இவ்வயக்தியை நம்மை கண்டு கொண்டிருந்தாப் போலே கண்டுகொண்டிரும் என்றருளிச் செய்து விடைக் கொடுத்தருள, அப்போதே நாதமுனிகளும் ஆழ்வார் ஸேவை ஸாதித்தருளினதுக்குத் தோற்று.
10. यस्सवैभव कै कारून्नकरस्सन भविष्यादाचार्यपरस्वरूपम ।
संधार्चयमास महानुभावम तम कारीसुनुम शरणम प्रपद्ये ॥
யஸ்ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பரஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரிஸூநும் ஶரணம் ப்ரபத்யே || என்கிற ஶ்லோகம் அருளிச் செய்தாரென்று நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச் செய்வர். இவ்வர்த்தம் ஓராண்வழியாய்ப் பரமகுஹ்யமாய் வந்ததென்றும் அருளிச்செய்வர். இப்படி நாதமுனிகள் நாலாயிரமும் ஆழ்வார் பக்கலிலே கேட்டருளி, மீளவும் வீரநாராயணபுரத்தேற எழுந்தருளினவளவிலே, ஆழ்வார் தம்மை விஷயீகரித்த ப்ரகாரங்களை மன்னனார் திருமுன்பே அருளிச் செய்து, ஸந்நிதியிலே எல்லா வரிசைகளையும் பெற்றுத் தம்முடைய திருமாளிகையிலே எழுந்தருளித் தம்முடைய மருமக்களான கீழையகத்தாழ்வானையும் மேலையகத்தாழ்வானையும் அழைத்தருளி, ஆழ்வார் தம்மை விஶேஷ கடாக்ஷம் பண்ணி க்ருபை பண்ணி அருளின ப்ரகாரத்தையும், ஸ்வப்னமுகேன ஸேவை சாதித்த கட்டளையையும் அருளிச் செய்ய, அவர்களும் விஸ்மயப்பட்டு, இப்படிப்பட்ட மஹானுபாவனுடைய ஸம்பந்தம் ஆரோஹண க்ரமத்தாலேயாகிலும் உண்டாகக் பெற்றதே என்று தேறியிருக்கலாமென்றார்கள்; பின்பு தம்முடைய ஶ்ரீபாதத்தில் ஆஶ்ரயித்து ஶிஷ்யகுண பூர்த்தியுடையவரான திருக்கண்ணமங்கை ஆண்டானுக்குத் த்வயோபதேஶ பூர்வகமாகத் திருவாய்மொழி ப்ராஸாதித்தருளுகிற போது ‘பொலிக பொலிக’ வந்தவாறே ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்திகளையும் ஸ்வப்னவ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய “அவ்யக்த்தியை ஸ்வப்னமுகேன ஸாக்ஷாத்கரித்த தேவரீரோடே ஸம்பந்தமுள்ள அடியேனுக்கு ஒரு குறைகளுமில்லை” என்று அருளிச்செய்தார்.
பின்பு உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், தம்முடைய குமாரரான ஈஶ்வரமுனிகள் இவர்களை அழைத்துருளி ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்திகளையும் அருளிச்செய்து, குருகைக்காவலப்பனை யோகக்ரமத்தை அப்யஸிக்கச் சொல்லி, உய்யக்கொண்டாரை தர்ஶனத்தை ப்ரவர்ப்பித்துக் கொண்டு வரச்சொல்லி, ஈஶ்வர முனிகளை “ உமக்கொரு குமாரர் உண்டாகக் போகிறார். அவருக்கு யமுனைத்துறைவர் என்று திருநாமம் சாத்தும்” என்று அருளிச் செய்து ஆஸந்ந சரமதஶையானவாறே உய்யக்கொண்டாரை அழைத்தருளி, “ஒருவருக்கும் வெளியிடாதே கிடீர்” என்று சூழரவு கொண்டு, ஆழ்வார் தமக்கு ப்ராஸிதித்தருளின பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை ப்ரஸாதித்தருளி, வரவும் அருளிச் செய்து, ‘இத்தை ஈஶ்வர முனிகள் குமாரருக்கு நாம் விரும்பின விஷயமென்று சொல்லித் தஞ்சமாக காட்டிக் கொடும்’ என்று அருளிச் செய்து, அவ்விக்ரஹத்தைத் திருவுள்ளத்திலே த்யானம் பண்ணிக்கொண்டு, ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அந்தமில் பேரின்பத்தடியரோடு ஒரு கோவையாக எழுந்தருளினார்.
பின்பு உய்யக்கொண்டார், நாதமுனிகள் ஶ்ரீபாதத்து முதலிகளும் தாமுமாக தர்ஶநார்த்தங்களை ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு ஸுகமே எழுந்தருளியிருக்கிற நாளிலே, உய்யக்கொண்டார் ஶ்ரீபாதத்து முதலிகள் மணக்கால்நம்பி, திருவல்லிக்கேணிப் பாண்பெருமாளரையர் ஸ்வாசார்யரிடத்திலே திருவாய்மொழி கேட்கிறவளவிலே “பொலிக பொலிக” என்கிற திருவாய்மொழி ஆனவாறே. “கலியும் கெடும்” என்கிற இடத்துக்கு அர்த்தம் அருளிச்செய்கிற வளவில், நாதமுனிகள் தமக்கு அருளிச் செய்த ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய, மிகவும் விஸ்மயப்பட்டு “நாதமுனிகள் பெற்ற பேறு ஆர் தான் பெறப் போகிறார்கள்? பவிஷ்யதாசார்ய வ்யக்த்தியை ஸ்வப்னமுகேந ஸாக்ஷாத்கரித்த இடத்திலே அத்யாகர்ஷகமாயிருந்தது என்று அருளிச் செய்யும் போது, ப்ரத்யக்ஷமாய் ஸாக்ஷாத்கரிக்கும் படியினால் லோகமாக மேல் விழுந்து ஆஶ்ரயிக்குமாகாதே” என்று அருளிச் செய்தார். அவ்வளவிலே உய்யக்கொண்டார் “அந்த மஹானுபாவனுடைய ஸம்பந்தம் ஸித்தித்தாலே ஒழியத் தவிராதிறே” என்று அருளிச் செய்தார்.
உய்யக் கொண்டார் சரமதஶையிலே ப்ரதம சிஷ்யரான மணக்கால் நம்பியை அழைத்து அருளிப் பன்னிரண்டு ஸம்வத்ஸரம் பழுக்க ஸ்வாநுவாத்தநம் பண்ணிப் போந்தவராகையாலே, நாதமுனிகள் தமக்கருளிச் செய்த ரஹஸ்யார்த்தங்களையும் வெளியிட்டருளி, ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய, மணக்கால் நம்பியும், இந்த தர்ஶன ப்ரவர்த்தகராரென்று கேட்க, நம்முடைய பக்கலிலே பகவத் ஸம்பந்தம் பண்ணிக் கொண்ட நீரே நடத்தக் கடவீர். பின்பு சொட்டைக் குலத்திலே நாதமுனிகளுக்குத் திருப்பேரனாரான யமுனைத்துறைவர் ப்ரவர்த்தகராவார். அவருக்கு பின்பு கரையத் தேவையில்லை என்று அருளிச் செய்தார்.
அதாவது – நாதமுனிகள் அருளிச் செய்தபடியே ப்ரபன்ன குலமாகப் பேறு பெறும்படி ஒரு மஹானுபாவர் திருவவதரிக்கப் போகிறார். அவராலே தர்ஶனம் விளங்கப் போகிறது – என்று அருளிச் செய்தார் என்றபடி. பின்பு உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பியை அழைத்தருளி, அவ்விக்ரஹத்தை ப்ராஸிதித்தருளி , “ நம் காலத்திலே யமுனைத்துறைவர் திருவவதரிக்கப் பெற்றதில்லையே. நீர் இவ்விக்ரஹத்தை, ‘உங்கள் திருப்பாட்டனார் விரும்பின விஷயம்’ என்று தஞ்சமாக காட்டிக் கொடுத்து, நாம் சொன்ன ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் ரஹஸ்யார்த்தர்தங்களையும் வெளியிடும்’ என்றருளிச் செய்தார்.
பின்பு மணக்கால் நம்பியும் ஆளவந்தாரைப் பச்சையிட்டுக் கொண்டு கோயிலேற எழுந்தருளி ஸ்வாசார்யரான உய்யக்கொண்டார் அநுமதிபடியே நாதமுனிகள் அருளிச் செய்ததாக ஸ்வாசார்யர் அருளிச் செய்த அர்த்த விஶேஷங்களையும் விஶேஷித்து ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்து ‘நெடுங்காலம் தேவரீர் இந்த தர்ஶனத்தை ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு ஶ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தியோடே எழுந்தருளியிரும்’ என்றருளிச் செய்தார்.
அப்படியே ஆளவந்தார் தர்ஶன ப்ரவர்த்தகராய் எழுந்தருளியிருக்கிற நாளிலே மணக்கால் நம்பி சரமதஶையானவாறே, நாதமுனிகள் ஸ்வப்னத்திலே எழுந்தருளி நம்பியைப் பார்த்து,”நம்முடைய யமுனைத்துறைவர்க்கு நாட்டையளித்து உய்யச் செய்து நடத்துமவனை நாம் தேடச் சொன்னோம் என்று சொல்லும். நாம் விரும்பின விக்கிரஹத்தைத் தஞ்சமாக அவர் கையிலே காட்டிக் கொடும்” என்றருளிச் செய்ய, இப்படி அருளிச் செய்கிறது ஏதென்ன, ‘நமக்கு ஸ்வப்ன த்ருஷ்டமான வ்யக்தி நம் பேரனுக்கு ப்ரத்யக்ஷ ஸித்தமானால் நமக்கு நெஞ்சாறல் தீரும்’ என்றருளிச் செய்தார்.
நம்பியும் – உடனே உணர்ந்தருளி மிகவும் விஸ்மயப்பட்டு, நிர்ஹேதுகமாக நமக்குப் பேறு கிடைப்பதேயென்று போர ப்ரீதராய் எழுந்தருளியிருக்கிற அவ்வளவிலே, ஆளவந்தாரும் அவராய் எழுந்தருள, “உம்முடைய திருப்பாட்டனார் நிர்ஹேதுகமாக நமக்கு சேவை சாதித்தருளி தேவரீர்க்கு ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்யச்சொல்லி அருளிச் செய்தாரென்று அவ்வார்த்தையை அருளிச் செய்ய, இது நேரேயாகப் பெற்றதில்லையேயென்று இழவு பட்டருளி, ஸத்வாரகமாகவாகிலும் விஷயீகரிக்கப்பட்ட இதுவே அமையுமென்று ப்ரீதராய் எழுந்தருளியிருக்க, பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் ப்ராஸிதித்து, “உம்முடைய திருப்பாட்டனார், தாம் விரும்பின விஷயம்” என்று உம்மை இவ்விக்ரஹத்தைத் தஞ்சமாகப் பற்றியிருக்கச் சொல்லும் என்று நியமித்தருளினார். ஆகையாலே தேவரீரும் இந்த அவதார ரஹஸ்யத்தைப் பேணி நோக்கி கொண்டு போரும்; இவ்வ்யக்திமானை நேரே ஸாக்ஷாத்கரிக்கப் போகிறீர். அவ்யக்திமானாலே இத்தர்ஶனம் நெடுங்காலம் நிலைநிற்கப் போகிறது” என்று அருளிச் செய்தார்.
ஆளவந்தாரும் அப்படியே தர்ஶன ப்ரவர்த்தகராய் எழுத்தருளியிருந்து அவ்விக்ரஹத்தைப் பரமரஹஸ்யமாகப் பரிவுடனே நோக்கிக் கொண்டு மணக்கால் நம்பி அருளிச் செய்தபடியே நாட்டை அளித்து உய்யச் செய்து நடத்துகிறவனைத் தேடுவதாக உத்யோகித்து ஒருவரையும் அடைவுபடக் காணாமையாலே வ்யாகுலாந்த கரணராய் எழுந்தருளியிருக்க, இளையாழ்வாருடைய வ்ருத்தாந்தங்களைச் சிலர் விண்ணப்பம் செய்யக் கேட்டருளி, பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளினவுடனே, நம்பி முகேன இளையாழ்வாரைக் கண்டு அவருடைய திருநக்ஷத்ரமும் கேட்டருளி, மூன்றுபடியாலும் ஓத்திருக்கையாலே பூர்ணமாகக் கடாக்ஷத்தருளி, ‘ஆமுதல்வனிவன்’ என்று ப்ரதிபத்தி பண்ணியருளினார்.
பின்பு கோயிலேற எழுந்தருளிச் சிலநாள் செல்லத் தம்முடைய சரமதஶையானவாறே, திருக்கோட்டியூர் நம்பியை அழைத்தருளி, அந்த விக்ரஹத்தை ப்ராஸிதித்து வரவாறும் அருளிச் செய்து, மற்றுமுண்டான வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்து, நீர் இளையாழ்வார்க்கு நாம் அருளிச் செய்த ரஹஸ்யார்தங்களெல்லாம் அருளிச் செய்யுமென்று நியமித்து, அவர் திருநாமத்தாலே தர்ஶனம் விளங்க போகிறது என்றும் ப்ரபன்ன குலமாகப் பேறு பெறும்படி உத்தாரகராகத் திருவவதரித்திருக்கிறார் என்றும் அருளிச் செய்தார். பின்பு ஆஸந்ந சரமதஶையானவாறே, முதலிகள் எல்லாரும் சூழவிருந்து, அடியோங்களுக்கு இனி தஞ்சம் ஏதென்று கேட்டருள, “உங்களுக்கு நாம் ஒருவரை உண்டாக்கியன்றோ பேறு பெறப் போகிறோம். உங்களுடைய இழவைத் தீர்த்து நாம் மாத்ரம் அன்றோ இழவோடே போகிறோம்” என்று அருளிச் செய்தார். இப்படி எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள் எல்லாரும் உடையவரிடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டார்கள். முன்புள்ளார்க்கு இவர் உத்தாரகராக கூடும்படி எங்ஙனேயெனில்,
11. अस्पोतयन्ती पितर प्रन्तुथ्यन्थी पितामह ।
वैष्णवो नः कुले जात सनः सन्तारायीश्यती ॥ (श्री वराह पुराण श्लोक )
ஆஸ்போடயந்தி பிதர: ப்ரந்ருத்யந்தி பிதாமஹா: |
வைஷ்ணவோ ந: குலே ஜாத: ஸ ந: ஸந்தார யிஷ்யதி || என்று முன்பே லோகாந்தரஸ்தரான பித்ருக்கள் ஸ்வகுலத்திலே ஒருவன் வைஷ்ணவனாகப் பிறந்தால் அவனையே தங்களுக்கு உத்தாரகனாகச் சொல்லக்கடவதிறே.
12. வைகுண்டே து பரே லோகே என்று சொல்லபடுகிற லோகாந்தரஸ்தரான நாதமுனி ப்ரப்ருதிகள், ஸ்வகீயமான ப்ரபந்ந குலத்திலே நித்ய ஸூரிகளின் தலைவராய் வைஷ்ணவாக்ரேஸர் ஆகிய ஒரு மஹானுபாவன் திரு அவதாரம் பண்ணினால், அவரையே தங்களுக்கு உத்தாரகராக நினைத்திருக்கச் சொல்ல வேண்டாவிறே. “பித்ராதிகளுக்கு வைஷ்ணத்வம் இல்லாமையாலும், அவர்களுக்கு ப்ராப்யமான தேஶ விசேஷம் வேறே ஒன்று உண்டாயிருக்கையாலும், உத்தரணாபேக்ஷை உடையவர்களாகையாலும் ஸ்வகுலோத்பன் ஆன வைஷ்ணவனை உத்தாரகனாகச் சொல்லக் குறையில்லை. இவர்கள் தாம் வைஷ்ணவாக்ரேஸர் ஆகையாலும், ப்ராப்ய பூமி கைபுகுந்திருக்குமவர்கள் ஆகையாலும் உத்தரணாபேக்ஷாரஹிதராயிருக்கவடுக்குமத்தனை போக்கிக் காலவிப்ரக்ருஷ்டரான இவர் பக்கலிலே ஸ்வோத்தாரகத்வ புத்தி பண்ணக்கூடாதே” என்னில் – அங்ஙனே சொல்லப்படாது. இதுவும் கூடும். எங்ஙனேயென்னில்- நாதமுனிகளுக்கு ஆழ்வாரிடத்திலே உத்தாரகத்வ ப்ரதிபத்தி நடக்குமே ; அதில் சோத்யமில்லையிறே; இனி, நாதமுனிகள் தமக்கு உத்தாரகமாக ஆழ்வாருடைய திருவடிகளை அறுதியிட்டு இருக்கையாலும், ஆழ்வார் தாமும் பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தைக் காட்டிக் கொடுத்து – 9. ராமஸ்ய தக்ஷிணோ பாஹூ : என்கிறபடியே “நம்முடைய அவயவமாக நினைத்திரும். இவ்வயக்திக்கடி நாமாகையாலே நமக்கு அடியுமாய் இருக்கும்” – என்று உடையவரை ஆழ்வார் தமக்குத் திருவடிகளாக அறுதியிட்டு அன்றே அருளிச் செய்கையாலும், நாதமுனிகள் ஆழ்வார் ப்ரஸாதித்த வ்யக்தியிலே பரிபூர்ணமாக உத்தாரகத்வத்தை அறுதியிட்டு, உய்யக்கொண்டார்க்கு வெளியிட்டருள, அவர் மணக்கால் நம்பிக்கு வெளியிட்டருள, மணக்கால் நம்பியும் ஆளவந்தார்க்கு வெளியிட்டருள, ஆளவந்தாரும் தம்முடைய ஶ்ரீபாதம் முதலிகளில் திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், பெரிய நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர் தொடக்கமானார்க்கு வெளியிட்டருள, இவர்களுடைய தந்நிஷ்டராய், இந்த ரஹஸ்ய விசேஷத்தைத் திருவுள்ளத்திலே கொண்டு உடையவரோடு ஸம்பந்தம் தங்களுக்கு வேண்டுமென்று கொண்டு “ கொடுமின் கொண்மின்” என்றும் 13. “ तस्मे देहम तथो ग्राहयम ” – தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் என்றும் சொல்லுகிறபடியே தாங்கள் உடையவர்க்கு ரஹஸ்யார்த்தங்களை உபதேஶித்து ஆசார்ய வ்யாஜேன ஸம்பந்தம் பெற்று , தந்தாம் குமார்களையும் ஆஶ்ரயிப்பித்து , அத்வாரகமான ஸம்பந்தத்திலும் ஸத்வாரகமான ஸம்பந்தத்தையிறே கனக்க நினைத்திருந்து ஸ்வோத்பாதக விஷயீகாரக விஷயத்தில் ஸ்வோத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிருந்தார்கள்’ – என்றபடி கண்டாகர்ணன் பக்கம் பண்ணின விஷயீகாரம் அவனுடன் பிறந்தவனளவும் சென்றாப்போலவும், ஶ்ரீ விபீஷணாழ்வான் பக்கல் பண்ணின விஷயீகாரம், கூடச் சென்ற நால்வரளவும் சென்றாப்போலவும், ஶ்ரீப்ரஹ்லாதாழ்வான் பக்கல் பண்ணின விஷயீகாரம் தத்ஸம்பந்திகள் அளவும் சென்றாப்போலவும் நினைத்திருந்தார்கள். பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் ஹேதுவான ப்ரதமபர்வ விஷயீகாரம் அப்படிச் செய்தபடி கண்டால், மோக்ஷைக ஹேதுவான சரமபர்வ விஷயீகாரம் இப்படியே செய்யச் சொல்ல வேண்டாவிறே. இவர்கள் எல்லாரும் இவரிடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டு இருக்கைக்கு நிதானம் நாதமுனிகளிறே. உடையவர்க்கு இவர்கள் ஆசார்யர்கள் ஆனது எதிலே அந்வயிக்கறது என்னில் உபகாரத்வத்திலே அந்வயிக்கும் இத்தனை, உத்தாரகத்வத்தில் புகாது.
ஆசார்யத்வந்தான் உபகாரத்வேநவும் உத்தாரகத்வேநவும் த்விவிதமாயிருக்கும். அதில் உபகாரத்வேந ஆசார்யத்வமே இவர்கள் பக்கலில் உள்ளது. தங்கள் பக்கல் உத்தாரகத்வமுண்டாகில், தந்தாம் குமாரர்களை இங்கு ஆஶ்ரயிப்பிக்கக் கூடாதிறே தங்கள் பக்கல் உபகாரகத்வமே உள்ளது என்னும் இடத்தை இவ்வழியாலே தோற்றுவித்தார்கள்.
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
In English – https://granthams.koyil.org/2012/12/charamopaya-nirnayam-thirumudi/