ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
கண்ணனும் பலராமனும் அக்ரூரரின் தேரில் வடமதுரையை வந்தடைந்தார்கள். அவர்கள் அக்ரூரருக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு நகரத்தின் வீதிகளில் ஆனந்தமாக வலம் வந்தார்கள். அங்கிருந்த பெரிய மாடங்களில் இருந்து நகரஸ்த்ரீகள் பலரும் கண்ணனையும் பலராமனையும் கண்டு மகிழ்ந்தார்கள்.
வில் விழாவுக்குப் போவதால் எம்பெருமான அழகாகத் தன்னை அலங்கரித்துக்கொள்ள ஆசைப்பட்டான். அந்த ஸமயத்தில் கம்ஸனுக்கு வஸ்த்ரங்களை வெளுத்துக் கொடுக்கும் ஒரு வண்ணான் எதிரில் வந்தான். கண்ணன் அவனிடத்திலே சென்று “எங்களுக்கு நல்ல வஸ்த்ரங்களாக் கொடு” என்று கேட்டான். அவனோ எம்பெருமானின் பெருமையை அறியாமல் வஸ்த்ரங்களைக் கொடுக்க மறுத்தான். அத்தோடு நில்லாமல் கண்ணனையும் பலராமனையும் இகழ்ந்து பேசி வசைபாடினான். அதைக் கண்ட கண்ணன் மிகவும் கோபமுற்று தன் விரல் நுனியால் அவன் தலையைத் துண்டித்து வீழ்த்தினான். அவனிடத்தில் இருந்த அழகிய வஸ்த்ரங்களைத் தானும் பலராமனுமாக எடுத்து அணிந்து கொண்டார்கள். இந்தச் சரித்ரத்தை நம்மாழ்வாரின் திருவாய்மொழி “நின்றவாறும் இருந்தவாறும்” பாசுரத்தின் வ்யாக்யானத்தில் நம்பிள்ளை அழகாகக் காட்டியுள்ளார். முன்பு எம்பெருமானிடத்தில் அபசாரப்பட்ட ஒரு வண்ணானுக்கு நற்கதி ஏற்பட வேண்டும் என்பதற்காக, எம்பெருமானார் பெரிய பெருமாளுக்கு அழகாக வஸ்த்ரங்களை வெளுத்துக் கொடுத்த ஒரு ஸ்ரீவைஷ்ணவ வண்ணானை எம்பெருமானிடத்தில் காட்டி, இவனுடைய முன்னோரான அந்த வண்ணானுக்கு நற்கதியைப் பெற்றுக் கொடுத்தார் என்று நம்பிள்ளை விளக்கியுள்ளார்.
அதற்கு அடுத்ததாக அழகிய மாலைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று கண்ணன் விரும்பினான். ஒரு சிறு வீதியிலே வாழ்ந்து வந்த ஸுதாமா என்கிற மாலாகாரரைத் தேடிப் போய் அவன் வீட்டை அடைந்தான். கண்ணனையும் பலராமனையும் கண்ட மாலாகாரருக்குப் பேரானந்தம் ஏற்பட்டது. அவர்களை நன்றாக உபசரித்துத் தான் கட்டியுள்ள மாலைகளில் சிறந்தவற்றை அவர்களுக்கு ஸமர்ப்பித்தான். எம்பெருமானும் மிகவும் மகிழ்ந்து அவனுக்குத் தன் அனுக்ரஹத்தைப் பொழிந்தான். அதற்குப் பிறகு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றான். இந்தச் சரித்ரத்தை நாச்சியார் திருமொழி “மாட மாளிகை சூழ் மதுரைப் பதி நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு” என்ற பாசுரத்தின் வ்யாக்யானத்தில் பெரியவாச்சான் பிள்ளை மிக அழகாக விளக்கியுள்ளார். நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் “பூசும் சாந்து” பாசுரத்தின் வ்யாக்யானத்தில் வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் இந்தச் சரித்ரத்தைக் காட்டியுள்ளார்.
எம்பெருமான், அதற்குப் பிறகு அழகிய சந்தனத்தைப் பூசிக்க ஆசைப்பட்டான். அப்பொழுது கம்ஸனுக்குச் சந்தனம் கொடுக்கும் த்ரிவக்ரா என்கிற கூனி எதிரே வந்தாள். இவள் பல விதமான சந்தனங்களை வைத்திருந்தாள். கண்ணன் அவளிடத்தில் தனக்குச் சந்தனம் கொடுக்குமாறு கேட்க, முதலில் அவள் தாழ்ந்த ரகத்தைக் கொடுக்க, அது வேண்டாம் என்று மறுத்து, மேலும் உயர்ந்த ரகத்தைக் கேட்டான். அவள் சற்று உயர்ந்த ரகத்தைக் கொடுக்க, எம்பெருமான் இருப்பதிலேயே சிறந்ததைக் கேட்டான். அவளும் எம்பெருமானின் ஸாமர்த்யத்தை நினைத்து ஆனந்தப்பட்டு, இருப்பதிலேயே உயர்ந்த ரகமான சந்தனத்தை அவனுக்குப் பூச அவன் மிகவும் மகிழ்ந்தான். அவளுக்கு அருள் புரிய எண்ணிய எம்பெருமான் அவள் கால் கட்டை விரலை தன்னுடைய திருவடிகளால் அழுத்திக் கொண்டு, ஒரு கையால் அவள் முகத்தைப் பிடித்து நிமிர்த்த, அவளுடைய கூன் விலகி அழகிய பொலிவை அடைந்தாள். இந்தச் சரித்ரத்தைப் பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “நாறிய சாந்தம் நமக்கிறை நல்கு என்ன தேறியவளும் திருவுடம்பில் பூச ஊறிய கூனினை உள்ளே ஒடுங்க அன்று ஏற உருவினாய்! அச்சோ அச்சோ எம்பெருமான்! வாரா அச்சோ அச்சோ” என்று அனுபவித்துள்ளார். நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் “பூசும் சாந்து” பாசுரத்தின் வ்யாக்யானத்தில் வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் இந்தச் சரித்ரத்தைக் காட்டியுள்ளார்.
இப்படி வண்ணானுக்குத் தன் நிக்ரஹத்தையும் மாலாகாரருக்கும் கூனிக்கும் தன் அனுக்ரஹத்தையும் எம்பெருமான் அருளினான்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- எம்பெருமானிடத்தில் அன்பு கொண்டிருந்தால் அவனுடைய அனுக்ரஹத்தைப் பெறலாம். எம்பெருமானை எதிர்த்தால் அவனுடைய நிக்ரஹத்தைப் பெறலாம். இவ்வாறு அவரவர்களுக்கு ஏற்ற பலத்தைக் கொடுத்துத் தன் ஸாம்யம் என்கிற குணத்தை எம்பெருமான் வெளியிடுகிறான்.
- எம்பெருமானிடத்தில் சிறு அளவில் அன்பைக் காட்டினாலும், அதற்கு அவன் பெரிய அருளைப் பொழிகிறான்.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org