ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
<< கம்ஸனின் பயமும் சூழ்ச்சியும்
கண்ணனையும் பலராமனையும் அழைத்து வரக் கம்ஸனாலே அனுப்பப்பட்ட அக்ரூரர் அதிகாலையில் வ்ருந்தாவனத்தை நோக்கி விரைந்து சென்றார். அக்ரூரரோ கண்ணனிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவர். கண்ணனைக் காண வேண்டும் என்று நெடு நாட்களாகக் காத்திருந்தார். அக்ரூரர் பாரிப்புடன் கண்ணனை நாடிச் சென்றது திருவேங்கட யாத்ரையுடனும் அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று பரமபதத்தை அடைவதோடும் ஒப்பிட்டுச் சொல்லப்படுகிறது.
அக்ரூரர் அதிகாலையில் வடமதுரையில் இருந்து புறப்பட்டுத் தன் தேரிலே வ்ருந்தாவனத்தை நோக்கி விரைந்து சென்றார். போகும்பொழுதே தான் அங்கே சென்றவுடன் கண்ணை நன்றாக விழுந்து வணங்க வேண்டும் என்பதையும் அப்படி வணங்கின தன்னை கண்ணன் தன் கைகளாலே எடுத்து நன்றாக அணைத்துக் கொள்வான் என்றும் பாரித்துக் கொண்டு சென்றார். இவ்வாறு சென்று வ்ருந்தாவனத்தை அடைந்தபோது, அங்கே கண்ணனும் பலராமனும் பால் கறக்கச் சென்று கொண்டிருந்தார்கள். அக்ரூரர் அவர்களைக் கண்டவுடன் பக்திப் பரவசத்திலே மூழ்கினார். உடனே தேரை விட்டு இறங்கி, ஓடிச் சென்று கண்ணனின் திருவடிகளில் வேரற்ற மரம் போலே விழுந்தார். கண்ணன் அவரைத் தன் திருக்கைகளால் எடுத்து அணைத்து அவருக்கு பேரானந்தத்தைக் கொடுத்தான்.
பின்பு அவரை உள்ளே அழைத்துச் சென்று அவருக்குப் பணிவிடைகள் எல்லாம் செய்து நந்தகோபரும், பலராமனும், கண்ணனுமாக அவர் வந்த விஷயத்தை வினவினார்கள். அக்ரூரரும் கம்ஸனின் தீய எண்ணத்தைச் சொல்ல, அதைக் கேட்ட கண்ணன் உடனே நாம் அக்ரூரருடன் புறப்படுவோம் என்று சொன்னான். நந்தகோபரும், தன்னுடைய ஆட்கள் பலரை அனுப்பிவைக்க முடிவு செய்தார். கண்ணனும் பலராமனும் அக்ரூரருடன் தேரில் ஏறிக்கொள்ள, அங்கிருந்த கோபிகைகள் கண்ணனின் பிரிவைத் தாங்கமுடையாமல் அழுதார்கள். தேர் நகரத் தொடங்கியது தேரின் பின் செல்ல முற்பட்டார்கள். ஆனால் கண்ணன் அவர்களை வராமல் தடுத்துவிட, அவர்கள் அங்கிருந்தே பிரியாவிடை கொடுத்தார்கள்.
சற்று தூரம் சென்று யமுனைக் கரையை அடைந்த பின்பு, அக்ரூரர் தன்னுடைய அனுஷ்டானங்களைச் செய்வதற்காகத் தேரை நிறுத்தி, தேரில் இருந்து இறங்கி, யமுனை நதியில் இறங்கினார். தீர்த்தத்தை எடுத்து ஆசமனம் பண்ணப் பார்க்க, அப்பொழுது நீருக்குள்ளே கண்ணன் எம்பெருமான் அற்புதமாகக் காட்சியளித்தான். இதென்ன ஆச்சர்யம் என்றெண்ணித் தேரிலே பார்த்தால் அங்கும் அவன் அமர்ந்திருந்தான். கண்ணன் தனக்கு ஸர்வேச்வரனாகக் காட்சி கொடுத்ததை நினைத்து அக்ரூரர் மிகவும் மகிழ்ந்து, எம்பெருமானை நன்றாக ஸ்தோத்ரம் செய்தார்.
இவ்வாறு அக்ரூரர், கண்ணனையும் பலராமனையும் வடமதுரைக்கு அழைத்துச் சென்றார்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- ஒவ்வொரு நாளும் எம்பெருமானை அடைய வேண்டும் என்கிற பாரிப்பு நமக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
- ஒருவர் எங்கிருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் எம்பெருமானை அடையவேண்டும் என்ற பாரிப்போடு இருந்தால், எம்பெருமான் அவருக்குத் தன் கருணையைக் கண்டிப்பாகக் கொடுப்பான்.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org