க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 48 – பாண்டவ தூதன் – பகுதி 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< த்ரௌபதிக்கு அனுக்ரஹம்

கண்ணன் எம்பெருமான் வெளிப்படுத்திய மிகவும் ஆச்சர்யமான ஒரு குணம் ஆச்ரித பாரதந்த்ர்யம் – அதாவது அடியார்கள் சொற்படி முழுவதும் நடப்பது. இதை இரண்டு இடத்தில் நன்றாகக் காணலாம் – ஒன்று பாண்டவர்களுக்குத் தூது போனது, இரண்டு அர்ஜுனனுக்கு ஸாரதியாக இருந்தது. இவற்றில் இப்போது பாண்டவர்களுக்குத் தூது போனதை இங்கு சற்று அனுபவிக்கலாம்.

பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டு வனவாஸமும் ஓராண்டு அஜ்ஞாத வாஸமும் (மறைந்து வாழ்தல்) முடித்து, த்ருதராஷ்ட்ரனிடத்தில் தங்களுடைய ராஜ்யத்தைத் திரும்பக் கேட்டார்கள். அப்பொழுது த்ருதராஷ்ட்ரன் பிள்ளைப் பாசத்தினாலே துர்யோதனன் விஷயத்தில் பாரபக்ஷமாக நடந்தான். துர்யோதனன் முதலானவர்கள் பாண்டவர்களுக்கு ஒரு சிறு இடம் கூடக் கொடுக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்.

அப்போது, பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் யுத்தம் ஏற்படும் சூழ்நிலை வருகிறது. கண்ணன் எம்பெருமான் இதைத் தான் எதிர்பார்த்திருந்தான். எப்படியாவது யுத்தம் ஏற்படவேண்டும், அப்போது அங்கே இருக்கும் அனைத்துத் தீயவர்களையும் ஓரிடத்தில் சேர்த்து அழித்து வேண்டும் என்பதே அவன் திருவுள்ளம். இதற்காக, தானே ஸமாதானம் பேசலாம் என்று சொல்லித் தூது போய் யுத்தம் நிகழ்வதை உறுதி செய்து வந்தான். பாண்டவர்கள் மனத்தில் தன்னையே தூதாக அனுப்பும் எண்ணம் தோன்றும்படிச் செய்து, அவர்கள் கேட்டுக்கொண்டவுடன், தான் துர்யோதனாதிகளை நோக்கித் தூது சென்றான். முன்பே ஸ்ரீராமாவதாரத்தில் ஹனுமனைத் தூதாக அனுப்பினான் எம்பெருமான். ஹனுமன் மிகவும் ஸாமர்த்யமாகத் தூது சென்று வந்ததால், அனைவரும் அவரைக் கொண்டாடினார்கள். இதைக் கண்ட எம்பெருமான் இனி ஒரு அவதாரத்தில் நாமே தூது சென்று இப்படிப்பட்ட பெருமையைப் பெறவேண்டும் என்று நினைத்து, க்ருஷ்ணாவதாரத்தில் அத்தைச் செய்தான்.

ஆழ்வார்கள் பாசுரங்களில் எம்பெருமான் பாண்டவ தூதனாகச் சென்றதை அழகாக அனுபவித்தவர்கள் நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும். நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு” என்று காட்டியுள்ளார். திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்தருளி” என்றும் “முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெருநிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே” என்றும் விளக்கியுள்ளார்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • தூது செல்வது என்பது அக்காலத்தில் நாய்த் தொழில் என்று சொல்லப்படும். அப்படி இருந்தாலும் தன்னுடைய அடியார்களான பாண்டவர்களுக்காக எம்பெருமான் தூது சென்றது அவனுடைய் ஸௌலப்யத்தின் எல்லை நிலம்.
  • எம்பெருமான் தானே வலியப் போய் பாண்டவ தூதனாகச் சென்றது, வேறு யாராவது சென்று ஸமாதானம் செய்து விட்டால், இந்த பூமி பாரத்தைக் குறைப்பது கடினமாகிவிடும் என்பதற்காக. தானே சென்று யுத்தம் நடக்கும்படிச் செய்து எல்லாத் தீயவர்களையும் ஓரே இடத்தில் கூட்டி அழிக்கவேண்டும் என்பதே அவன் திருவுள்ளக் கருத்து.

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment