ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
<< சால்வ மற்றும் தந்தவக்ர வதம்
கண்ணன் ஸாந்தீபனி முனிவரிடத்தில் பாடம் படித்தபோது, கூடப் படித்தவர் ஸுதாமா. இவர் குசேலர் என்றும் அழைக்கப்படுவார். இவரும் கண்ணனும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். இவர் தன் தர்மபத்னியுடன் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்தார்.
ஒரு முறை இவருடைய மனைவி, இவரிடத்தில் “நாமோ இங்கே உணவுக்கே மிகவும் கஷ்டப்படுகிறோம்”. உங்கள் நண்பரான கண்ணனோ த்வாரகாதீசனாக இருக்கிறார். நீர் அவரிடத்தில் சென்று கொஞ்சம் செல்வத்தைத் தானமாகப் பெற்றுவரலாமே” என்றாள். ஸுதாமாவோ “நாம் ஏன் இப்படி ஒருவரிடத்தில் சென்று கையேந்த வேண்டும். இருப்பதை வைத்து வாழலாமே” என்றார். ஆனால் அவள் மேலும் நிர்பந்தப்படுத்தியதால் வேறு வழியின்றி கண்ணனைச் சந்திக்கச் சென்றார். நண்பனைக் காணச்செல்லும்போது வெறுங்கையுடன் போவதா என்று எண்ணி தங்கள் இல்லத்தில் இருந்த அவலை ஒரு துணியில் சுற்றி எடுத்துச் சென்றார்.
த்வாரகையை அடைந்த அவர் கண்ணனின் அரண்மனைக்குச் சென்றார். அப்போது, ருக்மிணிப் பிராட்டி கண்ணனுக்குத் தொண்டு செய்து கொண்டிருந்தாள். இவர் வருவதைக் கண்ட கண்ணன் தன் ஆஸனத்தில் இருந்து எழுந்து வாஸல் வரை ஓடோடிவந்து இவரைத் தழுவிக்கொண்டு வரவேற்றான். பின்னர் அவரை அழைத்து வந்து தன் ஆஸனத்தில் அமர்த்தி, அவருக்குத் திருவடி விளக்கினான். ருக்மிணிப் பிராட்டி அப்போது இவருக்குச் சாமரம் வீசினாள். குருகுலவாஸத்தில் நடந்த கதைகளையெல்லாம் இருவரும் பேசி மகிழ்ந்தார்கள்.
கண்ணன் ஸுதாமாவைப் பார்த்து “எனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறாய்” என்று கேட்க, ஸுதாமா மிகவும் வெட்கத்தோடு தான் கொண்டு வந்திருந்த அவல் இருந்த துணி மூட்டையைப் பார்க்க, கண்ணனும் அதைப் பார்த்து, மிக விருப்பத்தோடு அதைக் கவர்ந்து ஒரே ஒரு அவலை உண்டு, மிகவும் உகந்தான். அடுத்த அவலை அவன் எடுப்பதற்குள் ருக்மிணிப் பிராட்டி கண்ணனைத் தடுத்து விட்டாள். கண்ணன் “என்ன விஷயமாக வந்தாய்” என்று ஸுதாமாவிடம் கேட்க, கண்ணனிடத்தில் எதையும் கேட்கக்கூடாது என்றிருந்ததால், ஸுதாமா “நெடுநாட்களாக உன்னைப் பார்க்காததால், பார்த்துவிட்டுச் செல்லவே வந்தேன்” என்று சொன்னார். அப்போதே கண்ணன் தன் திருவுள்ளத்தில் ஸுதாமாவின் சின்ன இல்லமானது ஒரு பெரிய மாளிகையாக வேண்டும் என்று ஸங்கல்பம் செய்ய, அது உடனே நடந்தது.
கண்ணனிடம் விடைபெற்றுத் தன் ஊருக்கு வந்து சேர்ந்த ஸுதாமா, தன்னுடைய இல்லம் இருந்த இடத்தில் இப்போது பெரிய மாளிகை இருப்பதைக் கண்டு ஆச்சர்யப் பட்டார். அவருடைய மனைவி வெளியே வந்து அவரை வரவேற்றாள். அவளும் மிக அழகான ஆடை அலங்காரங்களோடு இருந்தாள். இவை எல்லாம் கண்ணனின் அருளே என்று ஸுதாமா உணர்ந்தார். இருந்தாலும் முன்பு போலே வைராக்யத்துடன் வாழ்ந்தார்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- எம்பெருமான் தன் அடியார்களிடத்தில் பேரன்பு கொண்டவன். அவர்கள் தங்களைத் தாழ்ந்தவர்களாக நினைத்துக்கொண்டாலும், அவன் அவர்களை மிக உயர்வாகவே நினைக்கிறான்.
- நாமாக எம்பெருமானிடத்தில் எதைக்கேட்டாலும், நமக்குக் கேட்ட அளவே கிடைக்கும். ஆனால் நாம் கேட்காமல் அவனே கொடுத்தால் அளவுக்கதிகமாகக் கொடுப்பான்.
- ஒரு பருக்கை அவலுக்குப் பிறகு ருக்மிணிப் பிராட்டி கண்ணனைத் தடுத்ததற்கான காரணம் “இதற்கே இவ்வளவு செல்வத்தைக் கொடுத்தான் என்றால், மேலும் அவனுக்கு ஆனந்தம் வந்தால், ஸுதாமாவால் தாங்க முடியாத அளவுக்கு செல்வம் கொடுத்தால் என்ன பண்ணுவது” என்று கொள்ளலாம்.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org