ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
யுதிஷ்டிரனின் ராஜஸூய யாகம் முடிந்த பிறகு, துர்யோதனன் மயனால் கட்டப்பட்ட மாளிகையில் வலம் வரும்போது, அதன் ஆச்சர்யமான கட்டமைப்பில் மயங்கி, பாண்டவர்களுக்கு இப்படி ஒரு மாளிகையா என்று பொறாமை கொள்கிறான். ஒரு சில இடங்களில் தண்ணீர் என்று நினைத்து தரையில் ஜாக்ரதையாக நடக்கிறான். தரை என்று நினைத்துத் தண்ணீரில் வழுக்கி விழுகிறான். இதைக் கண்ட த்ரௌபதியும் மற்றும் சிலரும் ஏளனமாகச் சிரிக்க, துர்யோதனன் இன்னும் கோபம் கொண்டு பாண்டவர்களிடத்தில் மேலும் வெறுப்புக் கொள்கிறான். பாண்டவர்களை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிறான். துர்யோதனாதிகளின் தாய் மாமனான சகுனி பாண்டவர்களை யுத்தத்தில் ஜயிப்பது கஷ்டம் ஆகையால் அவர்களை சூதிலே ஜயிக்கலாம் என்று யோஜனை கூறினான்.
அதன்படி யுதிஷ்டிரனை துர்யோதனன் சூதாட அழைத்தான். ராஜதர்மத்தின்படி அதை மறுக்க முடியாததால் யுதிஷ்டிரனும் சூதாடத் தொடங்கினான். துர்யோதனன் தான் விளையாடாமல் சகுனியை விளையாட வைத்தான். சூதில் பந்தயமாக எதையாவது வைப்பார்கள். முதலில் செல்வம், ராஜ்யம் ஆகியவற்றை யுதிஷ்டிரன் இழந்தான். அதற்குப் பிறகு தன் தம்பிகளையும், தன்னையும், கடைசியில் த்ரௌபதியையும் பந்தயமாக வைத்து அனைத்தையும் இழந்தான். துர்யோதனன் மகிழ்ச்சிப் பெருக்கில் என்ன தவறு செய்கிறோம் என்பதை உணராமல், த்ரௌபதியை ஸபைக்கு இழுத்து வருமாறு தன் தம்பியான துச்சாஸனனை அனுப்பினான். வீட்டுக்கு விலக்காக இருந்த த்ரௌபதியை அவளுடைய அந்தப்புரத்தில் இருந்து இழுத்து வந்தான் அவன். என்ன நடந்தது என்பதை அறிந்த த்ரௌபதி தன் கணவனையும் அங்கிருந்த பெரியோர்களையும் ந்யாயம் கேட்டாள். ஆனால் அனைவரும் தர்மத்தை மறந்து, துர்யோதனனுக்கு அஞ்சி வாய் மூடி இருந்தனர். துர்யோதனன் ஆணவத்தால் த்ரௌபதியின் வஸ்த்ரத்தைக் களையுமாறு துச்சாஸனனுக்கு ஆணையிட்டான். அவனும் அவ்வாறே செய்யத் தொடங்கினான். த்ரௌபதியும் செய்வதறியாமல் திகைத்து நின்று தன் வஸ்த்ரத்தைப் பிடித்துத் தடுக்கப் பார்த்தாள். அப்போது அவளுக்கு ஒரு முறை காட்டிலே அவர்கள் இருந்தபோது ரிஷி சொன்ன உபதேசம் அதாவது “பெரிய ஆபத்து வரும்போது பகவானான ஹரியை நினை” என்றது நினைவுக்கு வர, கண்ணனிடத்தில், தன் இருகையையும் விட்டு, சரணாகதி செய்தாள். த்ரௌபதி கண்ணனிடத்தில் பேரன்பு கொண்டவள். கண்ணனும் உடனே அவளை ரக்ஷிக்கும் வகையில் துச்சாஸனன் இழுக்க இழுக்க அவளுடைய வஸ்த்ரம் பெருகும்படிச் செய்தான். துச்சாஸனன் கை ஓய்ந்து தன் முயற்சியை விட்டான்.
இவ்வளவு நேர்ந்த பிறகு, த்ரௌபதி மீண்டும் முறையிட, துர்யோதனன் மற்றும் ஸபையில் இருந்த அனைவரும் யுதிஷ்டிரன் செய்தது தவறு, அதாவது அவன் தன்னையும் தன் தம்பியையும் தன் மனைவியையும் பந்தயமாக வைத்தது தவறு என்று ஒப்புக்கொண்டு மொத்த ஆட்டத்தையும் தவறு என்று அறிவித்தார்கள். பிறகு மீண்டும் யுதிஷ்டிரனைச் சூடாட அழைத்து, இந்த முறை ராஜ்யத்தை மட்டும் பந்தயமாக வைத்து, தோற்றவர்கள் பன்னிரண்டு ஆண்டு காலம் வனவாஸமும் ஓராண்டு யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழவும் வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த முறையும் யுதிஷ்டிரன் தோற்றுப் போக, பாண்டவர்கள் ராஜ்யத்தை இழந்து காட்டுக்குச் சென்றனர். அக்காலத்திலும் கண்ணன் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினான். த்ரௌபதியோ தனக்கு அந்த ஸபையில் நேர்ந்த அவமானத்தால் துர்யோதனனும் துச்சாஸனனும் கொல்லப்பட்டால் ஒழியத் தான் தன் கூந்தலை முடிவதில்லை என்று சபதம் எடுத்தாள். இவளின் இந்த நிலையைக் கண்டு பொறுக்க முடியாமல்தான் கண்ணன் எம்பெருமான் துர்யோதனாதிகளை அழித்துவிடத் தன் திருவுள்ளத்தில் உறுதிபூண்டான்.
ஆழ்வார்கள் த்ரௌபதியிடத்திலும் பாண்டவர்களிடத்திலும் எம்பெருமான் கொண்ட கருணையையும் அவர்களுக்காக துர்யோதனாதிகளை அழித்ததையும் பல இடங்களில் காட்டியுள்ளார்கள். பெரியாழ்வார் தன் பெரியாழ்வார் திருமொழியில் “மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி” என்று காட்டுகிறார். திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக் கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான்” என்று காட்டியுள்ளார்.
இதில் உள்ள தாத்பர்யங்கள்:
- பிள்ளை லோகாசார்யர் “எம்பெருமான் த்ரௌபதியைக் காப்பதற்கு நேரில் வராததற்குக் காரணம் அவன் நேரில் வந்திருந்தால் முதலிலே தனக்கு உயிரினும் மேலான பாண்டவர்களைக் கொன்றிருக்க வேண்டும். ஏனெனில் த்ரௌபதி எம்பெருமானிடத்தில் சரணாகதி பண்ணிய பின்பு, அடியார்களான பாண்டவர்கள், எம்பெருமானின் சொத்தான த்ரௌபதியைக் காப்பாற்றியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாததால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.அதைத் தவிர்க்கவே அவன் நேரில் வரவில்லை” என்று விளக்கியுள்ளார்.
- ஆசைகளைக் கட்டுப்படுத்தத் தெரியாதவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், பெரிய துன்பத்தை அனுபவிப்பான் என்பது யுதிஷ்டிரனின் செயலால் தெரிகிறது.
- எம்பெருமான் எப்படித் தன் அடியார்களுக்கு உதவுகிறான் என்பதை த்ரௌபதி மற்றும் பாண்டவர்கள் சரித்ரத்தில் காணலாம். இவ்வளவு நன்மைகள் செய்தும் கடைசியில் தான் பரமபதத்துக்கு எழுந்தருளும்போது மிகவும் வருத்தத்துடன் “நான் த்ரௌபதிக்குத் தகுந்த விதத்தில் உதவி செய்யவில்லையே” என்று சொல்லிச் சென்றான். அடியார்கள் காட்டும் சிறு பக்திக்கும் அவன் தன்னைப் பெரிய அளவில் கடன்பட்டவனாக நினைக்கிறான்.
இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org